நீயும் நானும் (கல்முனையான்)

Wednesday, December 29, 2010

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”

நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்

பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று

பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்

முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?

0 comments: