கடைக்கண் திறக்காத காதல்

Sunday, January 22, 2012



புத்தம் புது இதயமொன்று வாடகைக்காய் வந்திருக்கு
குடி புக நினைத்தவர்கள்  சீக்கிரமாய் வந்திடலாம்
வெளிச்சமும் தண்ணீரும் தாராளமாய் தானிருக்கு
அடிக்கடி காற்றுவாங்க நுரையீரலும் அங்கிருக்கு

இதயத்தின் சொந்தக்காரன் நானாய் இருந்தபோதும்
வாடகைக்கு நீ வந்தால் நான் என்ற ஒன்று நாமாகிவிடும்
ஆம் என்று நீ சொன்னால் இதய அறைகளின் இருட்டினிலே
ஒட்டடை சாம்ராஜ்ஜியத்தை தூசுதட்டி துடைத்திடுவேன்.

இரத்த நாளமென்ற அதி வேக பாதையிலே நீயும்
அன்புக் கஞ்சியினை அளவோடு அழகாக ஊற்றிவிட
இதயச் சோனைகளும் ஈரலிப்பில் உப்பிவிட
ஓரத்தில் சங்கமிக்கும் எதிர்பார்த்த எண்ணத்துடன்

பேரழகி நீயென்று ஊரெல்லாம் ஓலமிட்டு
ஒப்பாரி வைக்கின்ற மல்லிகையின் மருதமான மணமும்
என் நாசி வழியே பாசியாய் படிந்துவிட்டு
மூளையின் மூலையிலே முனகுகிறது முக்தி பெற்று

என் அரும்பிய மீசையில் பட்டம் விடும் பதினாறு வயசு
ஏதோ பார்வை என்ற நூல் கொண்டு பறக்க விட
காதல் என்ற வால் தேடி உலகமெலாம் நான் அலைய
இன்னும் கிடைக்கவில்லை வாலும் செழிக்கவில்லை வாழ்வும்.

நடக்கமுடியாத நதிகள்

பெண்ணாய்ப் பிறந்ததனால் புண்ணாய்ப் போனவர்கள் நாங்கள்
சுரண்டிவிட்ட சொரணையிலே கரண்டியிட்டு ருசி பார்க்கப்படுபவர்கள்
அமாவாசை இருட்டினிலும் அம்மா ஆசை மறந்தவர்கள்

புண்ணிய பூமியிலே கண்ணியமாய் பிறந்திருந்தும்
இன்னும் அந்நியமாய் அலைபாயும் ஆதாமின் தோட்டத்தின்
அழகான ஆப்பிள்க் கனிகள் நாங்கள்

முக்தி பெற்ற யமுனையிலும் சக்தி பெற்ற கங்கையிலும்
சளைக்காமல் பெண்மையின் மணம் வீசும் போது
இன்னும் அடுப்படியில் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடலைக் கலக்கிவிட்டு எங்கள் கர்ப்பத்தில் புகுத்திவிட்டு
அர்ப்பமாய் தூரத்தில் நின்று பெண்ணியம் பேசுகின்ற
பேதைகளின் போதைப் பேச்சினிலே புதைந்து விட்டோம்

நதியாக நாமிருந்து வாழ்க்கைப் படகினை ஓடவிட்டும்
அதோ!..கதியாக நடுவினிலே நாமிருக்க
நடக்க முடியாத நொண்டிகளாய்  ஊர்ந்து செல்கிறோம் ஊர் ஊராய்...