ஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)

Wednesday, October 17, 2012

விறகுக் கட்டைகளாய் அடுக்கிக் கிடக்கிறோம் நாங்கள்
ஆறடி நிலம்தான் எமக்கு என்று உணர்ந்து கிடக்கிறோம்
பரந்த அறைகளின் உருண்டு படுத்த உடம்புகள்
சகோதர பாசத்தில் இன்று ஊறப்போட்ட உறவுகளாகிறோம்.

நடுச்சாமத்தில் நண்பனின் காலை பெட்சீட்டால் மூடி
அடுப்பெரிக்காமல் சூடாகவரும் தண்ணீரை வாளியில் நிரப்பிவிட்டு
அதிகாலை குளிரை மறந்து அவசரமாய் குளித்துவிட்டு
'கர்வா' பஸ்ஸிற்காய் அரைமணி நேரம் காத்து நிற்பதும் சுகம்தான்

பழைய பத்திரிகை தாள்களை நெடுக்காக விரித்து படுக்கவைத்து
காத்துக்கு பறக்காமல் பாரத்திற்கு அல்மேரா ஜூஸ் போத்தலில் தண்ணி நிரப்பி
சோத்தினை பாத்தி கட்டி அளவாக அழகாக அகப்பையால் பரப்பிவிட்டு
இடைக்கிடையே பொரியலும் சுண்டலும் புது மாப்பிளையாய் வீற்றிருக்கும்

சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்

சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..

எங்களுக்கு சொர்க்கம் இந்த நாலு சுவர்களுக்குள்ளேதான்
இது சுவர்களல்ல எங்கள் உணர்வுகளை சுமந்து நிற்கும் உறவுகள்
இது கட்டில்கள் அல்ல எங்கள் மனச்சுமைகளை இறக்கிவைக்க
இறைவனாய்ப்பார்த்து வழங்கிய அருட்கொடை



அதிகாலை வகுப்பினிலே (கல்முனையான்)

Friday, August 3, 2012

-அதிகாலை வகுப்பினிலே-

கருவறையில் இருக்கும் குழந்தை போல்
இருளறையில் உறங்குகிறது நான் கொடுத்த கணக்கு
திரிகோண கணிதமும் நூர்ந்த திரியான போது
கொழுத்திவிட கொழுந்துவிட்டது அதிகாலை வகுப்பு

வழமையாய் வந்த பதில்களில் வழுக்கி விழுந்து
நானும் மையொற்றுப் பேனாவில் மையல் கொண்டு
வெண்பலகையிலே கிசு கிசு பேசி முடிக்கும் வரை
கையிலே பேனையுடன் கனவு காணும் சகோதரங்கள்

சத்திர சிகிச்சைகளில் முத்திரை பதித்த கொப்பிகளும்
அதற்கு வைத்தியம் செய்யு கையிலே பேனையுடன்
அடிக்கடி தலை சொறிந்து யோசிப்பதாய் நடித்து
பின் முடித்து என்னிடம் காட்டும்போது அரைச்சாமம் முடிஞ்சிருக்கும்

முக்தி பெற்ற கணக்கொன்றை சித்தி பெற நாடி
சுத்தி நின்று தீர்க்கையிலே அடிக்கடி கத்திடுவேன் நானும்
புத்தி சொல்லி சக்தியெல்லாம் ஊதுபத்தியாகி
காற்றோடு ஆவியாகும் நானும் வகுப்புதனை முடிக்கையிலே..

கடைக்கண் திறக்காத காதல்

Sunday, January 22, 2012



புத்தம் புது இதயமொன்று வாடகைக்காய் வந்திருக்கு
குடி புக நினைத்தவர்கள்  சீக்கிரமாய் வந்திடலாம்
வெளிச்சமும் தண்ணீரும் தாராளமாய் தானிருக்கு
அடிக்கடி காற்றுவாங்க நுரையீரலும் அங்கிருக்கு

இதயத்தின் சொந்தக்காரன் நானாய் இருந்தபோதும்
வாடகைக்கு நீ வந்தால் நான் என்ற ஒன்று நாமாகிவிடும்
ஆம் என்று நீ சொன்னால் இதய அறைகளின் இருட்டினிலே
ஒட்டடை சாம்ராஜ்ஜியத்தை தூசுதட்டி துடைத்திடுவேன்.

இரத்த நாளமென்ற அதி வேக பாதையிலே நீயும்
அன்புக் கஞ்சியினை அளவோடு அழகாக ஊற்றிவிட
இதயச் சோனைகளும் ஈரலிப்பில் உப்பிவிட
ஓரத்தில் சங்கமிக்கும் எதிர்பார்த்த எண்ணத்துடன்

பேரழகி நீயென்று ஊரெல்லாம் ஓலமிட்டு
ஒப்பாரி வைக்கின்ற மல்லிகையின் மருதமான மணமும்
என் நாசி வழியே பாசியாய் படிந்துவிட்டு
மூளையின் மூலையிலே முனகுகிறது முக்தி பெற்று

என் அரும்பிய மீசையில் பட்டம் விடும் பதினாறு வயசு
ஏதோ பார்வை என்ற நூல் கொண்டு பறக்க விட
காதல் என்ற வால் தேடி உலகமெலாம் நான் அலைய
இன்னும் கிடைக்கவில்லை வாலும் செழிக்கவில்லை வாழ்வும்.

நடக்கமுடியாத நதிகள்

பெண்ணாய்ப் பிறந்ததனால் புண்ணாய்ப் போனவர்கள் நாங்கள்
சுரண்டிவிட்ட சொரணையிலே கரண்டியிட்டு ருசி பார்க்கப்படுபவர்கள்
அமாவாசை இருட்டினிலும் அம்மா ஆசை மறந்தவர்கள்

புண்ணிய பூமியிலே கண்ணியமாய் பிறந்திருந்தும்
இன்னும் அந்நியமாய் அலைபாயும் ஆதாமின் தோட்டத்தின்
அழகான ஆப்பிள்க் கனிகள் நாங்கள்

முக்தி பெற்ற யமுனையிலும் சக்தி பெற்ற கங்கையிலும்
சளைக்காமல் பெண்மையின் மணம் வீசும் போது
இன்னும் அடுப்படியில் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடலைக் கலக்கிவிட்டு எங்கள் கர்ப்பத்தில் புகுத்திவிட்டு
அர்ப்பமாய் தூரத்தில் நின்று பெண்ணியம் பேசுகின்ற
பேதைகளின் போதைப் பேச்சினிலே புதைந்து விட்டோம்

நதியாக நாமிருந்து வாழ்க்கைப் படகினை ஓடவிட்டும்
அதோ!..கதியாக நடுவினிலே நாமிருக்க
நடக்க முடியாத நொண்டிகளாய்  ஊர்ந்து செல்கிறோம் ஊர் ஊராய்...