நீயும் நானும் (கல்முனையான்)

Wednesday, December 29, 2010

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”

நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்

பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று

பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்

முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?

வாரிசுகள் (கல்முனையான்)


பூரண நிலவினிலே! என் வீட்டுத் தோட்டத்தின்
எலுமிச்சை செடிகளுக்கும், எலி-மிச்சம் வைத்த வற்றாளை
கொடிகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று

அரிதாரம் பூசிக் கொண்டு அரட்டை அடிக்கின்ற
பாகற் கொடியும் அதன் இறுகிய இணைப்பில்
மயங்கி நிற்கும் மரத்துப்போன கிளிசரியா கம்பும்

தொல் பொருள் நிபுணராய் தன் உடல் பரப்பி
ஆராய்ச்சி செய்யும் வெள்ளரியும் அவருக்கும் உதவியாய்
ஒத்தாசை புரிந்து பூரித்துப்போன பூசணியும்

உரம்திண்ட தெனாவட்டில் திறன் காட்டி நிற்கின்ற
மரவள்ளியும் தரம் கெட்ட காய் என்று
தகுதியுடன் தள்ளிவைக்கப்பட்ட வெண்டிச் செடியும்

வீராவேசம் பேசி வெடுக் கென்று மிடுக்கோடு
நிற்கின்ற கத்தரியும் ஏட்டிக்கு போட்டியாய்
வளர்ந்து வயசுக்கு வந்திருந்த தக்காளியும்

வாழ்த்துக்கள் கூறி வாயாராப்புகழ.. அடுப்படியில்
இருந்து கொண்டு இன்னும் சட்டியினிலே
கனவு காண்கிறனர் வற்றாளைக் கொடியின் வாரிசுகள்.

சந்தா்ப்ப பிராணிகள் (கல்முனையான்)


ஈர வலயத்து அட்டைகளின் மறு பிறப்பாய்
நன்மையை உறிஞ்சி விட்டு நாதியின்றி தவிர்க்கவிடும்
மனிதன் என்ற பெயரிலுள்ள இரண்டு கால்
பூச்சிகளாய் செத்தைகளில் பதுங்குகின்ற மானிடம்

பச்சை இரத்தத்தின் சிவப்பு நிறத்தினிலே காகிதப்
படகு விட்டு தோராட்டம் பார்க்கின்ற பாசாங்க
மனிதா்களின் ஈரமற்ற இதய இடுக்குகளின் ஓரத்திலே
இன்னும் இருக்கிறது சந்தர்ப்பவாதம் என்ற சாக்கடை வடிகான்கள்

சுவாசிக்கும் ஒட்சிசனின் ஓரப்பார்வையிலே ஒடுங்கி
நாசி நீரில் கால் கழுவி வெளியேறும் காபனீரொட்சைட்டிலே
ஈரத் தலையை வீரத்தோடு உலா்த்தி எட்டிப் பார்க்கும்
எட்டப்பக் கூட்டத்தின் ஏழாம் சாமத்து சாத்தான்கள்

எண்ணெய் வடியும் தலையினிலே மண்னை அள்ளி
மலர்க் கோலம் போடும் மானம் கெட்ட மங்கையரின்
அற்கஹோல் பார்வைக்காய் அரை வயிறு சாப்பிட்டு
அலைகின்ற ஆந்தைக் கூட்டத்தி்ன் முகவரிகள்

தார்போட்ட றோட்டினிலே யார் வீட்டில் குழப்பம் என்று
தூர் போட்டு மேய்கின்ற வெள்ளாட்டுக் கூட்டத்தில்
தள்ளாத வயதினிலும் துள்ளாத கால்கலுடன்
தூங்காமல் விழித்திருக்கும் பெருசுகளின் விழிகள்



புறப்படுவாய் என் பிரிய சகோதரனே !!!

Friday, September 3, 2010

உழுத்துப் போன சமுதாயத்தில் புழுத்துப்போன வட்டிதனை
கொழுத்திப்போட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே..
ஆதனத்தை சீதனமாக்கி பின் வேதனமாக்கும் போதனையை
சேதனம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
கலாச்சாரத்தை சிரச்சேதம் செய்யும் அபச்சாரமான விபச்சாரத்தை
சூரசம்ஹாரம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
வறுமைதனை வாழ்வின் உரிமையாக்கிய ஏழைகளின் கண்ணீரை
அருமையாக அழித்திட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சிந்தையின்றி போர் விந்தை புரியும் மூளையற்ற மந்தைகளை
கந்தையாக்க புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...
சேற்றுக்குள் நாற்று நட்டு சோற்றுக்காய் ஏங்குகின்ற ஏழையின்
வயிற்றுக்காய் புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

எதிர்பார்ப்பு

Monday, August 30, 2010



அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...

இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்

எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..

மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்

அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா....

என் தோழியின் அம்மா....(கல்முனையான்)

Monday, April 5, 2010


பத்து மாதம் என்னை சுமந்த என் அம்மா
ஏனோ என்னை பெற்ற ஒன்பதாம் மாதத்தில் ஒழிந்து கொண்டாய்
எப்படி அழுவது உனை நினைத்து நான்..
உன் புகைப்படம் பார்த்தேன் நானும்
அதில் என் இருப்பிடம் காணேனே என் அம்மா!!!

இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்தில் விட்டுவிட்டு
உச்சத்தில் இருந்து ஒய்யாரமாய் பார்க்கிறாய்
அம்மா உன்னைக் காண நான் கொடுத்து வைக்கவில்லை
அதனால் என்னையும் நீ காணவில்லை
பெருமிதம் அடைகிறேன் அம்மா நான் உன் பிள்ளையாய் ஆனதுக்கு!!!

ஏனம்மா என்னை விட்டு சென்றாய் தனியாக
உன் துணையாக நான் வந்திருப்பேனே அந்த அறியாத வயதினிலே
அன்று எத்தனை தடவை உன்னை அம்மா என்று அழைத்தேனோ தெரியாது
ஆனால் இன்று ஆயிரம் தடவை உச்சரிக்கிறேன் அம்மா அம்மா என்று
என் ஆசை தீர தீராது தாயே என் தாகம் உன் மீது கொண்ட பாசம்

அம்மா எனக்கு நீ வேண்டும் அம்மா மீண்டும் நீ வேண்டும் வருவாயா!
என் ஏக்கம் தீர்ப்பாயா தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து
அந்த இனிமையில் உறங்குகிறேன் உன் புடவைத்தலையணையினுள்
அம்மா என் உயிர் அம்மா இனிக்கிறது உன்னை உச்சரிக்க
அத்துடன் பனிக்கிறது என்ன கண் என்னை நச்சரிக்க.....