என் தலையணி (கல்முனையான்)

Monday, October 26, 2009




காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்
அதற்கு மட்டும்தான் தெரியும் என் உடலின்
உள்ளத்தின் உண்மையான சுயரூபம்.

காற்றடைத்த பையாக நானும்
பருத்திப்பஞ்சின் பால்ய சினேகிதனான
என் தலையணையும் அடிக்கடி முத்தமிட்டு
சல்லாபம் புரிவோம் ஒவ்வொரு நாளும்.

எனக்கு வேலை இல்லை என்று என்
வீட்டில் திட்டும் போது என்னை அரவணைத்து
அன்பு காட்டும் என் அம்மாக்கு அடுத்ததாக
என்னை ஆறுதல் படுத்துவது

கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாமே
உன்னை இறுக அணைக்கும் போது
எங்கேயோ தற்காலிகமாய் குறுகிய
விடுமுறையில் சென்றுவிடும்.

என் கண்ணீரையும் பெருமூச்சையும்
விலைக்கு வாங்கி உன்னகத்தே வைத்து
வட்டியும் முதலுமாய் அடுத்த நாள் காலை
அமைதியாய் சலவைக்கு செல்வாயே!!!

உன்னை விட இன்று எனக்கு யாருமில்லை
என்னை அண்மித்த ஜீவனாக
ஆதலால் உன்னை என் தலையணை என்பதை விட
என் காதலி என்றே அழைக்கிறேன் ஏற்றுக்கொள்வாயா!!!!