ஆறடி அகலச் சொர்க்கம் (கல்முனையான்)

Wednesday, October 17, 2012

விறகுக் கட்டைகளாய் அடுக்கிக் கிடக்கிறோம் நாங்கள்
ஆறடி நிலம்தான் எமக்கு என்று உணர்ந்து கிடக்கிறோம்
பரந்த அறைகளின் உருண்டு படுத்த உடம்புகள்
சகோதர பாசத்தில் இன்று ஊறப்போட்ட உறவுகளாகிறோம்.

நடுச்சாமத்தில் நண்பனின் காலை பெட்சீட்டால் மூடி
அடுப்பெரிக்காமல் சூடாகவரும் தண்ணீரை வாளியில் நிரப்பிவிட்டு
அதிகாலை குளிரை மறந்து அவசரமாய் குளித்துவிட்டு
'கர்வா' பஸ்ஸிற்காய் அரைமணி நேரம் காத்து நிற்பதும் சுகம்தான்

பழைய பத்திரிகை தாள்களை நெடுக்காக விரித்து படுக்கவைத்து
காத்துக்கு பறக்காமல் பாரத்திற்கு அல்மேரா ஜூஸ் போத்தலில் தண்ணி நிரப்பி
சோத்தினை பாத்தி கட்டி அளவாக அழகாக அகப்பையால் பரப்பிவிட்டு
இடைக்கிடையே பொரியலும் சுண்டலும் புது மாப்பிளையாய் வீற்றிருக்கும்

சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்

சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..

எங்களுக்கு சொர்க்கம் இந்த நாலு சுவர்களுக்குள்ளேதான்
இது சுவர்களல்ல எங்கள் உணர்வுகளை சுமந்து நிற்கும் உறவுகள்
இது கட்டில்கள் அல்ல எங்கள் மனச்சுமைகளை இறக்கிவைக்க
இறைவனாய்ப்பார்த்து வழங்கிய அருட்கொடை



0 comments: