அரசியல் (கல்முனையான்)

Tuesday, July 12, 2011


ஆன்மாக்களை அறுத்துப் பிழிந்து மனச்சாட்சியை எரித்து
சுயநலம் என்ற அமிலமூற்றி மைபோல் குழைத்தெடுத்து
சமுதாய மேனியிலே முழுவதுமாய் பூசிவிட்டு ஏமாற்ற வெயிலினிலே
ஆயுள் வரை வெறுமையாய் நிற்கின்ற ஊமை.

வாக்குறுதிகளின் வாய்களெல்லாம் கட்டப்படும் தொழுவமாய்
ஏழைகளின் கண்ணீரால் நிரம்பிவிட்ட தடாகமாய்
பொய்யிலே மையெடுத்து ஊமையின் இமைக்கு மை பூசி
நிர்வானக் குறிக்கோளுடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெடுமரம்

கால் வயிற்றுக் கஞ்சியினையும் கனிவோடு ஏற்கின்ற
ஏழையின் எலும்புகளில் வாக்குச் சீட்டை ஒட்டிவிட்டு
பலகோடி ரூபாய்க்கு வாழ்க்கைப்பட நினைக்கின்ற கோளைகளுக்கு
மனிதனாய் பார்த்து வழங்கும் நிச்சயதார்த்த தாம்பூலத் தட்டு

நேர்மை என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுப்பதற்காய்
விலைக்கு வாங்கப்பட்ட வெள்ளைச்சட்டையுடன்
அடிதடியில் முதுமானிப் பட்டம் முடித்துவிட்டு
இரவிலே காரிகையுடன் தஞ்சம் புகும் இலவச சத்திரம்

ஆக, அரசியல் என்ற பூக்கடையில் சாக்கடையை கலந்துவிட்டு
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கின்ற பெரிய மனிதர்களின்
அந்தப்புரங்களில் ஏழையின் உண்மையான உணர்வுகள் இன்னும் கொத்தடிமையாய்
சிறைப்பிடிக்கபட்டு சின்னாபின்னமாகின்ற நிலை எப்போது மாறுமோ??

0 comments: