குடி புக நினைத்தவர்கள் சீக்கிரமாய் வந்திடலாம்
வெளிச்சமும் தண்ணீரும் தாராளமாய் தானிருக்கு
அடிக்கடி காற்றுவாங்க நுரையீரலும் அங்கிருக்கு
இதயத்தின் சொந்தக்காரன் நானாய் இருந்தபோதும்
வாடகைக்கு நீ வந்தால் நான் என்ற ஒன்று நாமாகிவிடும்
ஆம் என்று நீ சொன்னால் இதய அறைகளின் இருட்டினிலே
ஒட்டடை சாம்ராஜ்ஜியத்தை தூசுதட்டி துடைத்திடுவேன்.
இரத்த நாளமென்ற அதி வேக பாதையிலே நீயும்
அன்புக் கஞ்சியினை அளவோடு அழகாக ஊற்றிவிட
இதயச் சோனைகளும் ஈரலிப்பில் உப்பிவிட
ஓரத்தில் சங்கமிக்கும் எதிர்பார்த்த எண்ணத்துடன்
பேரழகி நீயென்று ஊரெல்லாம் ஓலமிட்டு
ஒப்பாரி வைக்கின்ற மல்லிகையின் மருதமான மணமும்
என் நாசி வழியே பாசியாய் படிந்துவிட்டு
மூளையின் மூலையிலே முனகுகிறது முக்தி பெற்று
என் அரும்பிய மீசையில் பட்டம் விடும் பதினாறு வயசு
ஏதோ பார்வை என்ற நூல் கொண்டு பறக்க விட
காதல் என்ற வால் தேடி உலகமெலாம் நான் அலைய
இன்னும் கிடைக்கவில்லை வாலும் செழிக்கவில்லை வாழ்வும்.
