இதயத்தின் இடுக்குகளில் இலைமறையாய் வாழ்கின்ற
இளமையின் இரண்டாம் ஜென்மப் பிறப்பினைப்போல்
அடிக்கடி புனர் ஜென்ம்ம் எடுக்கின்ற ஏழைக் குலத்தின்
ஆறாவது அறிவாய் ஆக்ரோசிக்கிறது என் சமுதாயம்.
முதியோரைக் கண்டால் மரியாதை செய்து பழக்கப்பட்ட
சின்னஞ் சிறு பிள்ளைகளின் சிறகடித்த சிந்தனைகள்
இன்று கால் மேல் கால் போட்டு சரிசமமாய் பழகும்
பக்குவப்பட்ட சமூகத்தின் பாசாங்கு வேசங்களாயிற்று.
மாணாக்கராய் கண்சிமிட்டும் மனித குலக் கொழுந்துகளின்
கல்விப்பாதைகளை முளையிலேயே கிள்ளிவிட்டு
சினிமாவின் மோகத்தில் சிலிர்த்துவிட்ட மேனியினை
தட்டிக்கொடுத்துவிட்டு எட்டிப்பார்க்கும் எட்டப்ப சமூகம்.
நவீனத்து இளவல்களை நாகரீக சாயம் புசி
நாட்டு நடப்பினையும் வீட்டுப் பொறுப்பினையும்
குழியினுள்ளே இறுமாப்பாய் கொட்டிவிட்டு போதை என்ற
மாயக் குகையினிலே மல்லாக்க படுக்கவைக்கும் சமூகம்.
பெண்மை என்ற உண்மையின் வெண்மையை அறியாது
சோஷலிசக் கொடியின் கீழ் ஆடைகளின் கஞ்சத்தனமும்
பார்வைகளில் காமத்துளியை கரைத்துவிட்ட வீராப்புமாய்
வெறிச்சோடிப்போன நெஞ்சங்களாக்கும் சமூகம்
முதியோர்கள் என்ற முன் மாதிரியை முறித்துவிட்டு
அநாதை விடுதிகளில் அம்மாக்களும் அப்பாக்களும்
அலைமோதும் அருவருப்பான அடையாளங்களை
முத்திரை பதித்து முக்தி பெற்ற என் சமூகம்.
சிறார்கள், மாணாக்கர், இளைஞர்கள், பெண்கள், முதியோர்
போன்ற சமூகத்தின் ஐம் புலன்களும் மலடாகி
கொலை, கொள்ளை,கற்பழிப்பு சீழ்கள் வடிந்தோடும்
சாக்கடை சகதியாய் படிந்து கிடக்கிறது சமூகம்.
