பழஞ்சோறு... (கல்முனையான்)

Tuesday, November 17, 2009

நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை
வாலறுந்த பல்லி ஒன்று சண்டை போடுகிறது
தன் உணவினைத் தட்டிப்பறிக்க மற்றைய பல்லியிடம்...

பல்லியிலுமா!!! இந்தப் பாகப்பிரிவினை
பக்கத்து வீட்டு கோழியிறைச்சியின் தாழிப்பு வாசம்
என்தன் நாக்கின் நடுவிலே நயாகரா நீர்வீழ்ச்சியின்
போட்டோ கொப்பியை ஒட்டியது...

வாசத்தை மட்டும் சுவாசிக்கும் நாங்கள்
வேசத்தையிட்டு வாழ்கிறோம் மனிதர்கள் என்று
கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன் என்னை ஆவலுடன்
வெறும் ஏமாற்றத்தின் விளைநிலமாய் நான்

சுடு சோத்தின் சூட்டினிலே குளிர்காயும் ஏழைகள்
இடியப்பம் சம்பலும் அவர்களுக்கு சொர்க்கத்து உண்டிகள்
பழஞ்சோறாய் நாங்கள் வீதியிலே கொட்டிவிடப்பட
பணக்கார நாய்களெல்லாம் படையெடுத்து வருகின்றன.

பிரசவம் - (கல்முனையான்)

Monday, November 2, 2009

தாயின் கருவறையில் சிறைப்பட்டு
சிசுவாக நாளறியாத பிணையிலே
உலகிற்கு வந்துவிட்டேன்.

என்ன அது.. எல்லோரும் நடக்கின்றனர்
எனக்கும் இருக்கிறதே கால்கள்.
முடியவில்லையே.

ஓ.இன்னும் வருடங்கள்
செல்லவேண்டுமாம் அந்தக் கிழவி
பக்கத்து பெண்ணிடம் சொன்னாள்.

இரண்டு வருடத்தின் பின்
அங்காங்கே என் பாதங்கள் பட்டு
பூமியில் சில காயங்கள்.

என் தலையணி (கல்முனையான்)

Monday, October 26, 2009




காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்
அதற்கு மட்டும்தான் தெரியும் என் உடலின்
உள்ளத்தின் உண்மையான சுயரூபம்.

காற்றடைத்த பையாக நானும்
பருத்திப்பஞ்சின் பால்ய சினேகிதனான
என் தலையணையும் அடிக்கடி முத்தமிட்டு
சல்லாபம் புரிவோம் ஒவ்வொரு நாளும்.

எனக்கு வேலை இல்லை என்று என்
வீட்டில் திட்டும் போது என்னை அரவணைத்து
அன்பு காட்டும் என் அம்மாக்கு அடுத்ததாக
என்னை ஆறுதல் படுத்துவது

கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாமே
உன்னை இறுக அணைக்கும் போது
எங்கேயோ தற்காலிகமாய் குறுகிய
விடுமுறையில் சென்றுவிடும்.

என் கண்ணீரையும் பெருமூச்சையும்
விலைக்கு வாங்கி உன்னகத்தே வைத்து
வட்டியும் முதலுமாய் அடுத்த நாள் காலை
அமைதியாய் சலவைக்கு செல்வாயே!!!

உன்னை விட இன்று எனக்கு யாருமில்லை
என்னை அண்மித்த ஜீவனாக
ஆதலால் உன்னை என் தலையணை என்பதை விட
என் காதலி என்றே அழைக்கிறேன் ஏற்றுக்கொள்வாயா!!!!

சீதனம் (கல்முனையான்)

Friday, September 25, 2009



சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்

பரிதவிப்பு (கல்முனையான்)

Thursday, September 24, 2009



காமத்தின் ருசி அறியா காரிகையை
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா
போய்விட்டான் ஆறாத வடுவுடனே

அவனுக்கும் அவளுக்கும் இப்போது
தொலை பேசியில்தான் தாம்பத்யம்
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள்.

சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க
அவள் உள் மனம் பேசுகிறது
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே...

வெளியிலே சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு..

பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே
வெறும் நான்கு சுவருக்குள்ளே
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...

கருகிய காதல்(கல்முனையான்)



என்னவளை நான் நினைத்த போது
என் கண்ணில் வெறும் கண்ணீர் வந்தது
அவள் என்னை மறந்த போது
எந்தன் நெஞ்சில் இரத்தம் காய்ந்து போனது...

வெறும் மாயையினுள் ஒளிந்திருக்கும் சூட்சுமம்
அதற்கு நாம் வைத்த பெயர் காதலாம்
காதல் தோல்வியுற்றால் அவனின் நரம்புகள் கூட
ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறுகின்றது உடம்பை விட்டு

காதல் வலியை போக்க அவன் உதட்டிலே
செந் தணலாய் வெள்ளைச்சாரனுடன் சிகரெட்
அதன் பின்னால் சென்ற வெள்ளை வாயு
அவனின் தொண்டையிலே ஒரு தாஜ்மகால் கட்டுகிறது

இவன் சிகரெட் வாங்கும் கடைக்காரன்
சிரிக்கிறான் இவனைப் பார்த்து இவன் அழகைப் பார்த்து
வேறொன்றுமில்லை இவன் வாங்கும் சிகரெட்டுக்கு
இன்னும் அனுமதி கிடைக்க வில்லை இவன் வீட்டில்

காதல் கடனாய் 1987 ரூபாய் இன்னும் இருக்கிறது இன்றுவரை
துணிந்துவிட்டான் இவன் இதயத்தை வட்டிக்கு விட
மாதா மாதமாய் சென்று வட்டி வாங்க
இவன் செல்வது எங்கு தெரியுமா???? காதலியின் வீதியிலே

இவன் எழுதிய காதல் கடிதங்கள்
இன்று அவள் பிள்ளையின் கழிவு துடைக்கும் கடதாசிகள்
இவன் அனுப்பிய குறுஞ்செய்திகள்
இன்று அவள் கணவனுக்கு அனுப்பும் அன்பு மொழிகள்

ஆனால்.... அவன் பேசிய வார்த்தைகள் மட்டும்
எங்கோ காற்றில் கலைந்து,கரைந்து
சங்கமமாகிறது இவன் இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்.....

கண்ணீர் (கல்முனையான்)

Monday, September 14, 2009



எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்

சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்

என் இதயத்தின் இரத்த குழாய்களில்
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று

பரவாயில்லை என் கண் மட்டும்
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....

கவிதை (கல்முனையான்)

Monday, August 31, 2009



காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்....

எச்சரிக்கை (கல்முனையான்)



கண்ணிலே கருணையும்
வாயிலே அன்பையும் கொண்டு
இதயத்தை பரிமாறவென்று
ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டது...

கவனமாய் இருங்கள்...
உங்கள் இதயத்தையும் வாடகைக்கு
வாங்குவதற்கு வரலாம்
சொல்லி அனுப்புங்கள் அவர்களை
இங்கே இதயம் இத்துப் போய்விட்டது என்று..

சில வேளை சிரிப்பார்கள் அவர்கள்
உங்களை நல்லவர் என்பார்கள்
நீங்கள் ஏழு கொலைகள் செய்திருந்தாலும்..
நம்பாதீர்கள் அவர்களை
உங்களை தின்று உணர்வுகளை துப்பி விடுவார்கள்.

உங்கள் இதய அறைகளில்
பன்னீர் நிறப்புவார்கள் முழுமையாக
ஆறேழு மாதங்களின் பின்
அவைகள் வற்றிவிடும் அந்த
முரண்பாடுகள் என்ற வெப்பத்தால்..

ஆதலினால் அனபானவர்களே
வேண்டாம் என்று சொல்லுங்கள்
உங்கள் இதயத்தை கொடுக்காதீர்கள்
கொடுத்து விட்டால் கெடுத்துவிடும்
உங்கள் மூளையை ஹா ஹா என்னைப்போல்..

காதலின் சறுக்கல்.. (கல்முனையான்)

Thursday, August 27, 2009



காதலின் சறுக்கல்....

வெண்மையான உடலுக்குள்ளே
உண்மையை மறைத்து
ஆண்மையை ஏமாற்றும்
திறமை அது பெண்மை.

இனிக்க இனிக்க பேசி
பின் கண் சிவக்க சிவக்க அழுது
உன் நாசி வழியே நீர் வடிய
உன்னை அழ வைப்பதும் பெண்மை.

உந்தன் மனதினை மாற்றி
அதன் கோலத்தை குறைத்து பின்
இவ் அகிலத்தையே ஏமாற்றும்
ஒரு விச ஜந்து பெண்மை.

ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்
இக் காதல் என்ற பெண்மையில்
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.

சற்று உற்றுப்பாருங்கள் அவனை
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்
தெரியாது... அது தெரியாது....
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..

யாரும் அழவேண்டாம் இனிமேல்
ஏன் தெரியுமா எமக்காகத்தானே
அந்த வானம் அழுகிறது அதோடு
அவனும் அழுகிறான்.

அழுது முடித்து விட்டான்
ஆனால் அவன் கண்கள் மட்டும்
அடம் பிடிக்கிறது இமை மூட
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..

மன்னியுங்கள்.. உங்களையும்
இந்த பெண்மையையும்
அழ வைத்ததற்கு
சென்று வருகிறேன் நான்....

வேதனை....(கல்முனையான்)

Sunday, August 23, 2009



மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்
அவனுள் தோன்றும் வேதனை.
அவனையறியாமலே அவனுள்ளே
ஆட்கொள்ளப்படும் வெகுளித்தனம்

சற்று நிமிர்ந்தாலும் தலை வலி
காரணம் ஏதொ ஒரு வேதனை.. மனதளவில்
என் இரு கண்களும் ஏதோ இழந்த ஏக்கம்
இல்லை.. அது வேதனையின் தேக்கம்

என் காதுகள் கூட சரியாக கேட்பதில்லை
அவற்றின் திசுக்களில் கூட வேதனை போலும்
ஆமாம்,நேற்று என் காதில் எறும்பு ஒன்று
ஏதொ கூறியது மறந்துவிட்டது...

சற்று அண்ணார்ந்து பார்த்தேன்
வானத்தை அதிலும் ஒரு வேதனை
புரிந்தது எனக்கு தெளிவாக
வானில் இன்று நிலவு இல்லை அமாவாசையாம்....

மனித மூளை... (கல்முனையான்)

Wednesday, August 19, 2009


மரணித்துப்போன மனிதாபிமானத்தின்
மூத்த பிள்ளைதான் மூளை
இப்போது யாருமற்ற அநாதையாக
காடடுமிராண்டி கலாச்சாரத்திற்கு
முடிசூடா மன்னன்.

வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தால்தான்
சிவப்பு நிறம்...
மூளை சற்று தீவிரமாய் சிந்தித்தாலோ
உலகெங்கும் சிவப்பு நிறம்...

இது உறங்குவது நித்திரையில்தானாம்
வெறும் காய்ச்சி வடித்த பொய்
நித்திரையில் தானே பல பெண்களின்
கற்புகளும் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றது.

சற்று சரியாக இது நடந்ததனால்
ஓரிரு இடங்களில்
பசுமைப் புரட்சி என்ற நாமத்தில்
கொஞ்சம் மனிதாபிமானக் குஞ்சுகளின் மறுபிறப்பு

நட்பு.... (கல்முனையான்)


இரக்கத்தின் இறுதிச் சொட்டு வரை
இறுகிப்போன இதயத்தில்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கும்
நிரந்தரமான நிஜங்கள்

கற்பு என்பதன் பெறுமதி சில திருமதிகளுக்கு
வெறும் வெகுமதிகள்தான்
ஆனால் நட்பு என்பதன் அறிகுறி
உந்தன் இதயத்தின் மூலையில் முனகும் உன் மனசாட்சிதான்...

மனிதன் (கல்முனையான்)


கொஞ்சம் சதை,
கொஞ்சம் நரம்புகள் சேர்த்து,
இரத்தத்தில் பிசைந்தெடுத்து
ஆறடி எலும்புக்கோர்வையில்
வெற்றுத் தோலாற் சுற்றிக்கட்டப்பட்ட வெறும் கோது.....

இக் கோதிற்கு பெயர் மனிதன்...

என் ஹைக்கூக்கள்.... (கல்முனையான்)

Tuesday, August 18, 2009


கண்....
காமத்தின் ரகசிய காதலி

காது....
செவிட்டு மூளைக்கு ஒற்றையடிப்பாதை

மூக்கு....
தடிமல் குழந்தையின் செவிலித்தாய்

வாய்....
வங்காளம் செல்லும் சுரங்கப்பாதை

கழுத்து....
அணிகலனின் அலங்கார மேடை

மார்பு....
ஆண்களுக்கு அமைதி.. பெண்களுக்கு சுனாமி..

கைகள்....
பிச்சைக்கும் இச்சைக்கும் கடன்காரன்

வயிறு....
என்னுள்ளே எனக்கே தெரியாத களஞ்சிய சாலை

தொப்புள்....
பம்பரம் விடும் விளையாட்டு மைதானம்

கால்....
எண்சாண் உடம்பின் அத்திவாரம்

-கல்முனையான்-

காதல் என்றால் என்ன? (கல்முனையான்)



நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.

சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.

காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.

அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

அன்பு.... (கல்முனையான்)


ஏனென்று தெரியவில்லை
என்னை அன்புக்கு பிடிக்கவில்லை
யார் இந்த அன்பு?

வெளிச்சம் இல்லா நேரத்தில் ஒளியாய் வந்தவள்
பசிக்கின்ற வேளையில் உணவாய் நின்றவள்
உறக்கத்தின் வேளையில் தலையணையாய் நின்றவள்

அதோடு

என் மரணத்தின் போது எமனுக்கு உதவியாய் நின்றவளும் அவளே......

அதிகாலை - (புரட்சி கவிஞர் பாரதிதாசன்)

Monday, August 17, 2009

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
(அமைதியில் ஒளி... )

இமை திறந்தே தலைவி கேட்டால் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
(அமைதியில் ஒளி... )

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
(அமைதியில் ஒளி... )

பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்கலாயினர் அன்பு திருந்தி
(அமைதியில் ஒளி... )

இரண்டாம் ஜாமத்துக் கதை - (சல்மா)

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது

இரக்கம் - (வாலி)

மறியே
செம்மறியே !
மேயப்போகிறாயா ? போ
அதோ அந்த மலையடி பக்கத்தில்
நல்ல மூலிகைகள் மலிந்து கிடக்கின்றன
அவைகளையே மேய் !

தப்பித்தவறி விஷப்பூண்டுகளில்
வாயை வைத்து விடாதே
ரொம்பவும் துள்ளாதே நிதானமாய் போ. . .

உன் முட்டி எலும்புகள் முறிந்து விட்டால்
என் கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்…

உன்னைத் தேடும்படி வைக்காதே !
இருட்டியதும் நீயாகவே
வீடு திரும்பி விடு !

விடியும் வரையில்…அரைத்தூக்கத்தில்
ஆனந்தமாக அசைபோடு !
விடிந்தபிறகுதான்…

எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்! - (மு.மேத்தா)

காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்.

ஞாபக முட்கள்
காயங்களைச் சுற்றி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக,
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை.........

வெற்றி
உன்னை
அடுத்தவர்களுக்கெல்லாம்
அறிமுகப்படுத்தும் !

தோல்வியோ
உன்னையே உனக்குள்
ஒரு முகப்படுத்தும்
நிரந்தரமான வெற்றிக்காக
உன்னை தழுவிக் கொள்ளும்
தற்காலிகத் தோல்விகளை நீ
தாங்கிக் கொள் !

குவிந்த பிணங்களை
குழி தோண்டிப் புதைக்க
அல்லது
கொளுத்தி முடிக்க
அவகாசம் வேண்டாமா ?
அதற்காகத்தான்
ஒரு வாரம்
போர் நிறுத்தம் !

கடந்த கால செருப்புகளைக்
கழற்றி எறிவோம்;
எதிர்காலத்திற்கான
சிறகுகளைச் சேகரிப்போம் !

என் கற்பு

என் கருப்பையை
எப்போதும்
மூடிவைக்கவே
விரும்புகிறேன்.

என் வாழ்வே
பயங்கரமானதாகிற போது
எப்படி?

அகதி வாழ்வும்
அவலப்பெயர்வும்
பதுங்கு குளியும்
பாய் விரித்து படுக்க முடியாத
நிம்மதியற்ற இரவும்
எப்போது
நான் பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாவேனோ என்பதுவும்
வசந்தமில்லா வாழ்வும்
நம்பிக்கை சிறிது மில்லா
பாலைவன மனதும்
எக் கணமும்
என் உயிர் பறிக்கப்படலாம்
என்கின்ற உண்மைகள்
எல்லாவற்றையும் மறைத்து
எப்படி ஓர் உயிரை
என் கருப்பையில் சுமப்பது?

எனக்கான தீர்ப்பு

நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

முரண்பாடுகள் - (வைரமுத்து)

போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்குச் சிலை
கவிதைக்குக் கல்லறை

உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவிபத்திரம்

தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ

காதல் கவியெழுத
காமம் நாமெழுத

கற்பு முக்கியம்
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முரண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்

மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்

வெற்றியின் ரகசியம்

சாத்திரம்
சுழலும் போதும்

சமுத்திரம்
குமுறும் போதும்

புயல் மழை
சீறும் போதும்

பொறுத்தவன்
பொங்கும் போதும்

மறித்தவன்
வாழ்ந்ததில்லை

மறுத்தவன்
உலகிலில்லை.

என் ஏக்கம்.....

உன் புனிதத்தின் பிம்பங்களை உடைத்தெறியும்
என் மௌனம்
மிகப் புதிரானது.

என் மௌனங்களின் காற்புள்ளியில் தொக்கி நிற்கும்
உன் கேள்விகளுக்கு
என்னிடம் விடைகளோ தீர்வுகளோ இல்லை.

உன் வன்முறைகளின் மிச்சங்களிலிருந்துதான்
எனது மௌனம்
தனது தற்காப்பு ஆயுதங்களை
உருவாக்கிக் கொள்கிறது.

எனினும் என் மௌனம்
அதி வலிமையானது.

என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,
வலுவிழக்கும் உன் அதிகாரங்களையும்
விரியும் என் எல்லைகளையும்.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,

என் விடுதலையை.
உன் முயற்சிகளையும் மீறி
என் மௌனம்
சாத்தியப்படுத்தியிருக்கிறது

என்னை.

நம்பிக்கை

கண்ணிமைப்பொழுதின் காரிருள் சூழலில்
ஒளிப்பிழம்பாய் ஓர் தீற்றல்

மரணிக்கும் மனிதத்தின் மட்கிய எச்சத்தில்
விஞ்சி நிற்கும் ஒரு புள்ளியே
ஆயிரம் பகலவச்சுடராய்

சிதறுண்ட நீர்த்திவலைகளின்
ஒரு துளியே பெருஞ்சமுத்திரமாய்

எண்ணங்களின் அலைவரிசையில்
ஆர்ப்பரிக்கும் சிறு நினைவே
பெரும் ஒலியாய்
கனவுகளின் முடிச்சாய்

அலைக்கழிக்கும் சூறாவளியில்
கைக்கூட்டிடை ஒளிரும்
சுடர் விடும் அகலாய்

ஆழ்த்துளையில் பீறிட்டெழும் முதல் துளியாய்
வியாபித்திருக்கும் எங்கும்
சுழற்சியாய் நம்பிக்கை.

அன்பான நண்பர்களுக்கு

Sunday, August 16, 2009

எனது கவிதைப்படைப்புக்களை உங்கள் முன் பதிவு செய்ய எண்ணி உங்கள் மேலான கருத்துக்களை நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.

நன்றி